Wednesday, November 22, 2017

யார் தலைவர்கள்?



எப்பொழுதெல்லாம் அதர்மம் தலைவிரித்தாடுகிறதோ அப்பொழுதெல்லாம் நான் வருவேன் என்ற கீதாச்சார வரிகளின்படி, ஏதாவது நடந்து நம் பழைய நிலைமை திரும்பி வராதா ??? என்ற நல்லெண்ணத்தில்தான் நல்லவர்களின் மனது துடித்துக்கொண்டிருக்கிறது.  நல்ல தலைவர்கள் தமக்கு பிறகு தலைவர்களை உருவாக்கிவிட்டுதான் சென்றார்கள் . ஆனால் ADMK-ல் , தலைவர்கள் இன்னொரு தலைவர்களை விரும்ப மாட்டார்கள். இது MGR காலத்திலிருந்தே தொன்று தொட்டு தொடரும் ஒரு பாரம்பரியம். ஜெயலலிதாவுக்கும் இது பொருந்தும். இன்று எல்லோருமே  எதிர்ப்பார்ப்பது ஒரு நல்ல தலைவரை என்று நமது மனம் சொன்னாலும்,  நாடு முழுவதும் மக்களை சுரண்டும் தலைவர்களின் ஏதோவொரு கட்சியில்  இணைந்து, தாங்களும் முன்னேற வேண்டும் (பணபலத்துடன்) என்று இளைஞர்களின் மனது சொல்வதை உணர முடிகிறது .

வினை விதைத்தவன் வினை அறுப்பான் - என்ற சொல்வடையில் உள்ள பொருள் அனைவருக்கும் விளங்கும். அது போல ஏதோ முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகுதான் இந்த மன்னார்குடி மக்கள் கொள்ளை அடித்தது போல் இப்பொழுது ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.  ஆனால், இவையனைத்தும் அவர் இருந்த போது அவரின்  ஆசியோடுதான் இந்த கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றது என்பதை  நாம் மறக்க கூடாது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மக்கள் தண்ணீரில் தத்தளித்தபோதே  மக்களை வானூர்தியில் வந்து எட்டி பார்த்தவர் நம் முன்னாள் முதல் அமைச்சர். அவருக்கு நிகழ்ந்த மரணம் வருத்தம் தருவதாக இருந்தாலும், இதில் அவருக்கும் ஒரு பங்கு இருப்பதை மறக்க கூடாது. ஏனெனில் அவர் நினைத்திருந்தால் அவர்களை அறவே அண்டவிடாமல் செய்திருக்க முடியும்.

கூவத்தூர் நிகழ்வுகளை நாம் பார்த்தபோதே, நம் தலைவர்கள் எப்படிப்பட்டவர்கள்  என்பதை உலகிற்கு உணர்த்தினார்கள். "தர்ம யுத்தம்" என்ற வார்த்தையை போட்டு ஊடகத்தினர் உலகத்தின் பார்வையை OPS பக்கம் திருப்பினார்கள். இதெயெல்லாம் விட வெட்கக்கேடு ஒரு ஆளுநரே ஒரு கட்சியின் இரு தலைவர்களை இணைத்து வைத்தது.

இதற்கு நடுவே கட்சி ஆரம்பிக்கிறேன் என்று கூறி எனக்கு பொற்குவை தாரீர் என்ற நடிகரோ  அவ்வப்பொழுது அறிக்கை மட்டும் வாசிக்கிறார் அதுவும் Twitter- ல். இன்னொருவர் ஆண்டவர் சொன்னால் வருவேன் என்றும் சிஸ்டம் சரியில்லையென்று கூறிக்கொண்டு, வரவேண்டிய சமயத்தில் வருவேன் என்று சொல்லி கொண்டு அந்த மோசமான ஸிஸ்டெத்தின் தலைவர்களை சந்திப்பதையும் பார்க்கமுடிகிறது.

காமராஜர், கக்கன், இராஜாஜி, தந்தை பெரியார் போன்ற தலைவர்களோடு இப்பொழுது நாம் நிகழ்காலத்தில் பார்க்கும் தலைவர் என்று கூறி கொண்டு திரியும் இவர்களை பார்க்கும் பொது, இதையெல்லாம் பார்க்கும் அடுத்த தலைமுறை நம்மை மன்னிக்குமா?  ஏனென்றால் நாம் தான் இவர்களையெல்லாம் தலைவர்கள் என்று கூறிக்கொண்டு அவர்களின் ஆட்சியில் வாழ்கிறோம்.

கடவுள் ஏன் கல்லானார்? தினம்  கல்லாய் போன மனிதர்களாலே....கல்லாய் போனதனால்தான்  நம் மனமும் நாளுக்கு நாள் நடந்து வரும் நிகழ்வுகளை மறந்து விடுகிறது.

Wednesday, November 15, 2017

இந்துஜாக்கள் பலி வாங்க படுகின்றனர்


இந்தியா முழுவதும் ஏதோவொரு காரணத்திற்காக ஆயிரம் இந்துஜாக்கள் பலி வாங்க படுகின்றனர். இவ்வுலகில் ஆயிரம் காரணங்கள் சொல்லும் ஆகாஷ் - கள் ஆயிரம். காரணங்கள் எதுவாக இருந்தாலும்  ஆகாஷ் - கள் வளர்க்கப்பட்ட விதம் குறித்து கேட்டு பெண்களை கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்க விரும்பவில்லை. ஏனெனில் எந்த தாயும் தகப்பனும் தன் குழந்தையை தறுதலையாக வளர்க்க விரும்ப மாட்டார்கள். குடும்பத்தை மீறி குழந்தைகள் வளர்ப்பில் இந்த சமூகத்திற்கும் பொறுப்புகள் வேண்டும்.

இதற்கான மாற்றங்கள் குடும்பத்திலிருந்து மட்டுமின்றி  பள்ளிக்கூடங்கள்,  கல்லூரிகள் , அலுவல் செய்யும் இடங்கள்  மற்றும் அவர்கள் சந்திக்கும் மனிதர்கள்  என பட்டியல் நீளுகிறது. தவறை யார் (குழந்தைகள் / ஆண் / பெண் ) செய்தாலும்  தவறு என்ற சிந்தனை விதைக்க வேண்டும் .  ஆனால் தவறை இரண்டாகப் பிரித்து , தவறு - தப்பு எனப் பிரிப்பதே எப்பேர்ப்பட்ட  மனிதர்களையும்  மிருங்கங்களாக்குகிறது.  குழந்தைகள் எதை கேட்டாலும் வாங்கி கொடுப்பதை இந்த சிக்கல் ஆரம்பமாகிறது.  குழந்தை வளர வளர  "நினைத்ததை பெற வேண்டும்"  என்ற சிந்தனை மேலோங்குகிறது. இந்த சிந்தனைகள் தான் சாதாரண மனிதனையும்  ஆகாஷ் - கள்  ஆக்குகிறது.

ஒவ்வொரு தந்தையும் தாயும் தம் குழந்தைகள்  என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். நண்பர்களின் பங்கும் மிக முக்கியம். யாராவது  தம் குழந்தையை பற்றி குறை கூறும் போது  "என் குழந்தை செய்ய மாட்டான்(ள்)" என்கிற சிந்தனையை தாண்டி சிறிது கண்காணிக்க வேண்டும்.
"எண்ணிய முடிதல் வேண்டும்" என்றான் பாரதி. ஆனால் அடுத்த வரியிலே நல்லவே எண்ணல் வேண்டும் ,  திண்ணிய நெஞ்சம் வேண்டும் என்கிறார் . ஆகாஷை போன்றோரோ அடுத்த வரியை மறந்து எண்ணிய காதலை மட்டும் மனதில் நினைத்து தன் வாழ்க்கைக்கும் உலைவைத்துக்கொண்டான்.

இப்படி புரியாத/ தெளிவில்லாத  ஆகாஷ்- கள்(ல்) ஆயிரம் இந்துஜாக்களின் வாழ்க்கையை  கொன்று குவிக்கிறார்கள்.  இந்துஜா மேல் குற்றங்கள் இருக்கலாம் , ஆனால் தன் உயிரை மாய்த்து கொள்ளவே இந்த உலகத்தில் உரிமையில்லாத போது, அடுத்தவரின் உயிரை கொல்லும் இந்த வியாதிகள் நீக்கப்பட வேண்டும் .  இப்பொழுதுதான் தமிழ் சினிமாக்கள் அறம் போன்ற திரைப்படங்கள் மூலம்  சமூக நீதியை காட்டுகின்றனர். ஆனால் வந்த திரைப்படங்கள் வாரி வாரி ஹீரோக்கள் எப்பொழுதும் விரும்பிய பெண்ணை மணப்பதையே காட்டி அதற்காக எதையும் செய்யலாம் என்ற கருத்தை பதிய வைக்கின்றனர்  சில படங்கள் தவிர்த்து.  பள்ளி கூடங்கள் மதிப்பெண்கள் மட்டுமல்லாமல்  நீதிக்கதைகள்  நேரம் ஒதுக்கி அவர்கள் வாழ்வில் சுடரொளி ஏற்றும் பொறுப்பை ஏற்க வேண்டும்.

இனியாவது விட்டில் பூச்சிகள் போல பறந்து நெருப்பிற்கு  இரையா(க்)காமல் , நீறுபூத்த நெருப்பிலிருந்து எழும் பீனிக்ஸ் பறவையை போல வாழ இந்த சமுதாயமும் அக்கறை கொள்ளட்டும்.

Tuesday, November 14, 2017

குழந்தைகள் தினம்

குழந்தைகள் தினம் - குதூகலமாய்  கொண்டாட வேண்டிய  நாள் இன்று. குழந்தைகளுடன் இருந்த  நேருவின்  நெகிழ்வில் , மகிழ்வில் அவர் உதிர்த்த வார்த்தை முத்துக்கள்- குழந்தைகள்  தினமாய் கொண்டாடுகிறோம் .  நேருவுக்கு எப்படி ரோஜாக்களை பிடித்ததோ அதேபோல குழந்தைகளுக்கும் ரோஜாக்களை பிடிக்கிறது அதுவும் இளஞ்சிவப்பு ரோஜாக்கள் என்றால் இஷ்டமோ இஷ்டம் .  இன்றைய குழந்தைகள் தான் நாளைய இந்தியா என்றார் . ஆனால் நாமோ இன்றைய குழந்தைகள் தான் நாளைய பணியாளர்கள் என்று வளர்க்கிறோம்.  அதிலும் அழுத்தமாய் பணி என்று சொல்லியே வளர்க்கிறோம்.  உளவியல்  துறையில் சிறந்து விளங்கும் ஒருவராலேயே  தன் குழந்தையை சரியாக வளர்க்க தடுமாறுகிறார்கள். இதை கேட்டால் இந்த உலகத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப ஓட வேண்டும் என்கிறார்கள் . அப்படி ஓடி எதை சாதிக்க வேண்டும் ?  கூகிள் சுந்தர் பிச்சையாய் இருந்தாலும் சரி , அம்பானியாய்  இருந்தாலும் , குழந்தைகள் என்ற உலகத்தில் குதூகலமாய் குதித்து கொண்டாடிவிட்டு இன்று உலகத்தினரால் கொண்டாடப்படுகிறார்கள். நம் குழந்தைகள் அடிமைகள் அல்ல அவர்கள் நம்முடைய அன்பு பரிசுகள் என்று நினைத்து அரவணைத்தாலே அவர்கள் இந்த எல்லையில்லா உலகத்தை வென்று உங்கள் காலடியில் வைப்பார்கள்.   என் குழந்தை என் சொத்து  என்று நினைக்காமல் என் குழந்தை என் அன்பு பரிசு  என்று எண்ணும்போது உண்மையான  உலகம் உங்கள் குழந்தையின் காலடியில் இருக்கும். சிறு வயதில் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதுவே ஆலமரமாய் அவர்கள் மனதில் வேரூன்றி தழைக்கும். நிறைந்த அன்பு  உங்களின் வாழ்க்கையை உயர்த்தி பிடிக்கும். குழந்தைகள் உங்கள் வாழ்க்கையின் உணர்வுகள், உறவுகள் மற்றும் உயரங்கள். இந்த உணர்வுகளை , உறவுகளை உயர்த்தி பிடிப்போம்.

என் மகள்

குறு குறு விழிகளோடு
விளையாட்டில் ரசனையோடு விளையாடி
கதைகள் சொல்ல காத்திருப்பாள் என் கண்மணி.

கற்பனை கதைகளை மட்டுமே
கேட்ட  என் காதுகளுக்கு - தன்
வகுப்பு நிஜக்கதைகளை சொல்ல
காத்திருப்பாள்  என் கண்மணி.

வீட்டிற்கு சென்றதுமே விளையாடலாம்
என்ற  நினைப்பு - ஆனால்
அவள் வயிறு  பசித்து காத்திருப்பதை
விழிகளில் சொல்வாள் என் கண்மணி.

சமைக்க ஆரம்பித்ததுமே  அம்மா
இன்னைக்கு என்ன நடந்துச்சின்னா ...
என்று என் பதிலை கூட கேட்காமலே
பதில் சொல்ல எத்தனிக்கும் அழகே அழகு.

செல்லமாய் நான் கோபித்தாலும்
அவள் கொஞ்சல் நடையில் என்
குணத்தை மாற்றுவாள் - என்னை
குயில் போல இசைக்க வைப்பாள்.

அப்பாவிடம் அன்பு காட்டுவதை
அம்மா கோபிப்பாளோ  என்று
செல்லமாய் சிணுங்கி கொண்டே 
நெருங்கி கட்டி அணைப்பாள்  முத்த
மழையில்  என்னை மூழ்க வைப்பாள்.

இப்படி என் செல்லத்தை
தங்கமே என்று கூப்பிட்டால் 
சேதாரம் எவ்வளவு என்பார்கள்
தமிழே என்று கூப்பிட்டால்
முத்தமிழில் எந்த தமிழ்  என்பார்கள் .
ஈடில்லா என் மகளை  எப்படி கூப்பிட்டாலும் 
அப்பொருளைவிட உயர்ந்தவள்
விலை மதிப்பற்றவள்.

Friday, November 10, 2017

மழையென்றதும்  மகிழ்ச்சி மட்டுமே மனதில். மனதிற்குள் வளையோசை கலகல பாட்டு  கேட்கிறது.  எனக்கும் மழைக்கும் மட்டுமே தெரியும் சின்ன சின்ன ரகசியங்கள். என்னுடைய மகளுக்கும் எனக்கும் உள்ள நட்பு பூக்கும் தருணமே  மழைத்துளிகளுடன் உறவாடி மகிழ்வுடன் எங்கள் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கையில் தான் . எப்பொழுதும்  ஒருவித  கற்பனையோடு  பயணிக்க வைக்கும் உறவை உணர்வை வாரி வழங்குவது இந்த மழையே.  மழையால் மட்டுமே ஆயிரம் முத்தங்களை அன்புடன் அளிக்க முடியும் அதுவும் ஓரிரு நிமிடங்களில்..... நிலை கொள்ளாது தவிக்க வைக்கவும் , நிமிடத்தில் மகிழ்விக்கவும், நீண்ட  நேரம் காத்திருக்க செய்யவும் , கவிஞர்களுக்கு கற்பனையை  வழங்குவதும் இந்த மழையே.

புதிய இந்தியா பிறக்கிறது

இதே நாள் அன்று : புதிய இந்தியா பிறக்கிறது என்ற அறிவிப்பு  என் அடி வயிற்றில் புளி கரைத்தது. மின்னலென வீட்டிற்கு வந்து எல்லா டப்பாக்களையும் ஆராய வைத்தது,. வேறெதற்கு சேமிப்பு வீணாக கூடாதென்ற ஆதங்கம். 

என் கண்மணியின் உண்டியல் பணம்தான் எங்களை வாழ வைத்தது , சில்லறை எவ்வளவு முக்கியம் என்று உணர வைத்தது. உழைத்த காசு உண்டியலில் இருந்த உணர்வு , வங்கியில் இருந்த சேமிப்பில் இல்லை. வாராக்கடன் மாதிரி ஒரு வித ஏக்கம். 

ஆயிரம் , ஐநூறு இருந்தும்  ஐந்து, பத்து கொடுத்தவர் எல்லாம் உள்ளத்தில் உயர்ந்தோராயினர். Demonetization என்ற வார்த்தைக்கு டிக்ஷனரியை தேடிய நாள். பத்துநாளில் எல்லா பிரச்சினைகளும் சரியாகிவிடும் என்று பாரத பிரதமர் அறிவித்த போது  மனதில் இருந்த மகிழ்ச்சி, மறுதினத்திலிருந்து நாசமாய் போனது நாள்தோறும் நாளிதழ்களை பார்த்து அது சொல்லிய நிகழ்வுகள் பார்த்து.



எத்தனை நிகழ்வுகள் தள்ளி போனது  இறப்பு தவிர. ரேஷன் அரிசிக்கு, இலவச வேஷ்டி சேலைக்கு வரிசையில் நின்ற உணர்வு  நான் என் சொந்த பணத்தை எடுக்க வரிசையில் நின்ற போது  உணர்த்தியது.  ஒரு குழந்தையை பெற்றடுக்க பத்து   மாசம் பட டயலாக் போல Demonetization என்ற வார்த்தை ஒரு யுகத்தை தாண்டியும் என் நினைவில் நீளும்.

மழைக்கு காத்திருக்கும் இந்நேரம்

வானமெங்கும் இருள் பரப்பி - அடுத்த 
மழைக்கு காத்திருக்கும் இந்நேரம் 
எல்லோர் மனத்திலும் ஓர் 
இனம் புரியாத பயம்

ஆம் நாளை என்னவாகும்  என்ற 
கனவுகளோடு சிறுகுழந்தைகள்.
குழந்தைகளை எங்கே அனுப்புவது என்ற
கவலையோடு கணினி அம்மாக்கள்.
இது எதுவுமே தெரியாமல் வேலை 
பார்க்கும் அப்பாக்கள். 

மழையும் ஒரு பெண்தானே - அதனால்தானோ
அது மக்களை காக்கும் - தன் மக்களை 
காக்கும் கடமையை செவ்வனே செய்கிறது.

அஞ்சாமல், அவசரப்படாமல்  நின்று 
நிதானமாய் நிமிடத்தில் மழை பெய்து- 
சேமியுங்கள் என் செல்லங்களே - மழைநீரை
சேமியுங்கள் என் செல்லங்களே என 
சிரிக்கிறது - இடி மின்னலுடன் 
இசையை பொழிகிறது.

குடிசை அம்மா முதல் - அடுக்கு மாடி 
தரைதள அம்மா வரை - இனம் புரியாத 
கலக்கம்  கண்ணில் நிம்மதியில்லா குழப்பம்.

அடுத்தநாள் எப்படி ஆபிஸ் - போவது 
யாரிடம் குழந்தையை விடுவது. 
போகும் வழியில் இருக்கும் - பள்ளங்களை 
கணெக்கெடுக்க வேண்டும் என்ற சிந்தனையோடு 
நினைவுகள் நீண்டுகொண்டே நகர்கிறது...

அன்று விடுமுறை என்றதும் துள்ளி
குதித்து  ஓடியது நினைவுக்கு வந்தது- குழந்தைகளாய்.
கடமை என்ற கயிற்றை தூக்கி கொண்டு
ஓடியதில் கணினி மட்டுமே வாழ்க்கையானது.
நினைத்து பார்த்தால் நிம்மதியை 
தொலைத்தது மட்டுமே நிஜம் .

மானுடத்தின்  மனநிலையை  உணர்த்திய 
என் மழையே நீ வருக - உனக்காக 
வள்ளுவரை போல்  வான் சிறப்பு  எழுத 
முடியாமல் போனாலும்  - உன்னை 
நினைக்கும் போதெல்லாம் வலம் வருகிறது  
நெஞ்சுக்குள் ஒரு ஓசை.