Wednesday, November 15, 2017

இந்துஜாக்கள் பலி வாங்க படுகின்றனர்


இந்தியா முழுவதும் ஏதோவொரு காரணத்திற்காக ஆயிரம் இந்துஜாக்கள் பலி வாங்க படுகின்றனர். இவ்வுலகில் ஆயிரம் காரணங்கள் சொல்லும் ஆகாஷ் - கள் ஆயிரம். காரணங்கள் எதுவாக இருந்தாலும்  ஆகாஷ் - கள் வளர்க்கப்பட்ட விதம் குறித்து கேட்டு பெண்களை கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்க விரும்பவில்லை. ஏனெனில் எந்த தாயும் தகப்பனும் தன் குழந்தையை தறுதலையாக வளர்க்க விரும்ப மாட்டார்கள். குடும்பத்தை மீறி குழந்தைகள் வளர்ப்பில் இந்த சமூகத்திற்கும் பொறுப்புகள் வேண்டும்.

இதற்கான மாற்றங்கள் குடும்பத்திலிருந்து மட்டுமின்றி  பள்ளிக்கூடங்கள்,  கல்லூரிகள் , அலுவல் செய்யும் இடங்கள்  மற்றும் அவர்கள் சந்திக்கும் மனிதர்கள்  என பட்டியல் நீளுகிறது. தவறை யார் (குழந்தைகள் / ஆண் / பெண் ) செய்தாலும்  தவறு என்ற சிந்தனை விதைக்க வேண்டும் .  ஆனால் தவறை இரண்டாகப் பிரித்து , தவறு - தப்பு எனப் பிரிப்பதே எப்பேர்ப்பட்ட  மனிதர்களையும்  மிருங்கங்களாக்குகிறது.  குழந்தைகள் எதை கேட்டாலும் வாங்கி கொடுப்பதை இந்த சிக்கல் ஆரம்பமாகிறது.  குழந்தை வளர வளர  "நினைத்ததை பெற வேண்டும்"  என்ற சிந்தனை மேலோங்குகிறது. இந்த சிந்தனைகள் தான் சாதாரண மனிதனையும்  ஆகாஷ் - கள்  ஆக்குகிறது.

ஒவ்வொரு தந்தையும் தாயும் தம் குழந்தைகள்  என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். நண்பர்களின் பங்கும் மிக முக்கியம். யாராவது  தம் குழந்தையை பற்றி குறை கூறும் போது  "என் குழந்தை செய்ய மாட்டான்(ள்)" என்கிற சிந்தனையை தாண்டி சிறிது கண்காணிக்க வேண்டும்.
"எண்ணிய முடிதல் வேண்டும்" என்றான் பாரதி. ஆனால் அடுத்த வரியிலே நல்லவே எண்ணல் வேண்டும் ,  திண்ணிய நெஞ்சம் வேண்டும் என்கிறார் . ஆகாஷை போன்றோரோ அடுத்த வரியை மறந்து எண்ணிய காதலை மட்டும் மனதில் நினைத்து தன் வாழ்க்கைக்கும் உலைவைத்துக்கொண்டான்.

இப்படி புரியாத/ தெளிவில்லாத  ஆகாஷ்- கள்(ல்) ஆயிரம் இந்துஜாக்களின் வாழ்க்கையை  கொன்று குவிக்கிறார்கள்.  இந்துஜா மேல் குற்றங்கள் இருக்கலாம் , ஆனால் தன் உயிரை மாய்த்து கொள்ளவே இந்த உலகத்தில் உரிமையில்லாத போது, அடுத்தவரின் உயிரை கொல்லும் இந்த வியாதிகள் நீக்கப்பட வேண்டும் .  இப்பொழுதுதான் தமிழ் சினிமாக்கள் அறம் போன்ற திரைப்படங்கள் மூலம்  சமூக நீதியை காட்டுகின்றனர். ஆனால் வந்த திரைப்படங்கள் வாரி வாரி ஹீரோக்கள் எப்பொழுதும் விரும்பிய பெண்ணை மணப்பதையே காட்டி அதற்காக எதையும் செய்யலாம் என்ற கருத்தை பதிய வைக்கின்றனர்  சில படங்கள் தவிர்த்து.  பள்ளி கூடங்கள் மதிப்பெண்கள் மட்டுமல்லாமல்  நீதிக்கதைகள்  நேரம் ஒதுக்கி அவர்கள் வாழ்வில் சுடரொளி ஏற்றும் பொறுப்பை ஏற்க வேண்டும்.

இனியாவது விட்டில் பூச்சிகள் போல பறந்து நெருப்பிற்கு  இரையா(க்)காமல் , நீறுபூத்த நெருப்பிலிருந்து எழும் பீனிக்ஸ் பறவையை போல வாழ இந்த சமுதாயமும் அக்கறை கொள்ளட்டும்.

No comments:

Post a Comment